• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வீரவேங்கை அன்பு நினைவு


 16.04.1985 அன்று மானிப்பாய் சாவற்காட்டில் கேணல் கிட்டு உட்பட்ட தோழர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது. தனது இடுப்பிலிருந்த கைக்குண்டை வெளியே எடுத்தபோது கைக்குண்டின் தடை நீக்கப்பட்டிருந்ததை கண்ட வீரவேங்கை அன்பு, அக்குண்டு வெடித்து கேணல் கிட்டு உட்பட்ட தோழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அக்குண்டினை தனது வயிற்றோடு அணைத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாகவும் வீரவேங்கை அன்பு தொடர்பாகவும் கேணல் கிட்டு அவர்களின் நினைவு பதிவு

'ஓ' எம் எம் தோழா, உன் அன்பான நடத்தையால், உனக்கு அன்பாக நாமிட்ட பெயர் அன்பு. உன்னை இழந்தோம். எம் அன்பை இழந்தோம்.

அன்பு என்ற பெய ரை க் கேட்டு சிலர் உன்னைச் சிறுவன் என்றோ, மிருதுவான தோற்றம் உடையவன் என்றோ, நினைக்கலாம். 6 அடிக் கும் கூடிய உனது உயர்ந்த தோற்றத்தையும், தினவெடுத்த திரண்ட தோள்களையும் எம்மால் என்றும் மறக்க முடியாது.

உன்னால் பயிற்றப்பட்ட எம் இளைஞர்கள் நீ இறந்த செய்தி கேட்டு, உன்மீது கொண்ட அன்பால் அவர்கள் அடைந்த துயர், சொல்ல முடியாதது. உன் வீரஞ்செறிந்த தியாக வரலாறு ஒவ்வொரு மக்களும் அறிய வேண்டியது.

யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது, குருநகர் இராணுவ முகாமில் இருந்து பொலிஸ் நிலையத்திற்கு உதவி கிடைக்காமல் தடை செய்யும் பெரும் பணியை, செவ்வனே செய்து முடித்தவன். இராணுவத்தினர் இரவு ரோந்துக்குப் புறப்படும் முன், கண்ணிவெடியை நிலைப்படுத்தவும் வேண்டும். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கும்வரை அமைதியைப் பேண வேண்டிய பொறுப்பான வேலைக்காக, வெடிமருந்தில் (Explosive) தேர்ச்சி பெற்ற அன்பு நியமிக்கப்பட்டான்.

வெற்றிகரமாக கண்ணிவெடிகளை நிலைப்படுத்திய அன்பு, G8A3 என்ற தானியங்கி றைஃபிளைத் தாங்கி, பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கியதும் முகாமைவிட்டு வெளி வந்த இராணுவத்தினர் மீது G8A8 ஆல் சரமாரியாக “இந்தா”.... "இந்தா” என்று சுட்டு அவர்களை விரட்டிய அழகை, இப்போதும் தோழர்கள் நினைவுகூர்ந்து கண்ணீர் சொரிகின்றனர்.

யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடங்கி எமது தோழர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறும்வரை, மிகப் பலம் பொருந்திய குருநகர் முகாமிலிருந்து எந்த ஒரு கவச வாகனமோ அல்லது இராணுவப் பிரிவோ வெளியேறாமல் தடுத்து, எம் வெற்றிக்கு உறுதி அளித்தவன் அன்பு.

நாம் தாக்குதல்களுக்குச் செல்லும்பொழுதெல்லாம் றொக்கட் லோஞ்சரை அன்புதான் எடுப்பான். அதைத் தூக்கிச்செல்லும் உடல்வலுவும் சிறந்த பயிற்சியும் அன்பிடம் இருந்ததால், அவனை நாம் “ டேய்! லோஞ்சர்’” என்று அன்பாக அழைத்தோம்.

அன்று காலை நாம் எல்லாருமாகக் காலை உணவருந்திக் கொண்டிருக்கின்றோம். வெளியில் இருந்து வந்த அன்பு, தானும் எம்முடன் சாப்பிடுவதற்காக எம்முடன் பாயிலிருந்து சாப்பிடத் தொடங்குகின்றான்.

அவனுடைய பார்சலில் ஒரு வடை இருந்ததைக் கண்ட மற்றைய நண்பன், அதைப் பாய்ந்து எடுத்தான். அன்பான பறிபாடு, அன்பான ஒப்பந்தம், அன்பான பங்கிடல் மூலம் வடையைப் பங்கிட்டுக் கொண்டு மிகச் சந்தோசமாக, குதூகலமாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.

கீழே பாயிலிருந்து சாப்பிடுவதால் தான் இடுப்பில் அணிந்திருந்த கைக்குண்டை அன்பு வெளியே எடுக்கும்போது, கைக் குண்டின் தடை நீக்கப்பட்டு விட்டது. அன்புவின் முகம் மாறுகின்றது. கைக்குண்டை உடனே வெளியே எறியவேண்டும். வெளியிலும் தோழர்கள் அமர்ந்திருந்தனர்.

உடனே தன்னுடைய வயிற்றோடு குண்டை அணைத்துக் கொண்டான்; வெடியதிர்வுகளோ

அல்லது குண்டுச் சிதறல்களோ மற்றைய தோழர்களைப் பாதிக்கவிடாமல், அவை அனைத்தையும் தன் உடலால் ஏற்றுக் கொண்டான்.

“டமார்” என்ற பெரிய சத்தம்.

புகை மண்டலம்.

நாம் தூக்கி வீசப்பட்டோம்.

புகை விலகிய போது.

'ஓ......கோரம்'.

அறை எங்கும் இரத்த வெள்ளம்.

அறைகளில் எல்லாம் சதைத் துண்டங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

கைக்குண்டால் துண்டாடப்பட்ட உடலின் பாகங்கள் மூன்று துண்டுகளாக்கப்பட்ட உடல்... எம்மையெல்லாம் காப்பதற்காக தன்னுடைய உடலால் வெடி குண்டைத் தாங்கிய அன்பு, துண்டுகளாகக் காணப்பட்டான்.

எம்மோடு பேசிக்கொண்டிருந்தவன் - சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் - திடீரென்று துண்டுகளாகக் கிடக்கும்போது எப்படித்தான் எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியும்?

உடலை அகற்றும்போது அன்புவின் டயறியின் பக்கங்கள் இரத்தத்தில் தோய்ந்து காணப்பட்டன. அதில் ஒரு பக்கத்தில், "மரணம் ஒருவனை அழிப்பதில்லை” என்ற வசனம் காணப்பட்டது. ஆம், அன்புவின் மரணம்-தியாகம் - இன்னும் எத்தனையோ, ‘அன்புகளை' உருவாக்கியிருக்கின்றது!

 

ஆக்கம்: கேணல் கிட்டு



© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.