• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
லெப்.கேணல் பாக்கியன்

லெப்.கேணல் பாக்கியன்


செயல்வீரன் லெப். கேணல் பாக்கியன் 

இவன் வடமராட்சிக் கிழக்கின் வெற்றிலைக்கேணி மண் பெற்றெடுத்த புதல்வன். தன் சொந்தக் கிராமத்தை எதிரியிடமிருந்து மீட்டெடுத்த பெருமையோடு தன் போராட்ட வரலாற்றின் பக்கங்களை மூடிக்கொண்ட காவிய நாயகன். ஆனாலும் தொடர் அலையாய் போராளிகளினதும் மக்களினதும் மனங்களில் நிறைந்து அன்றும் இன்றும் நிற்பவன்.

1983ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் அணியில் இணைந்து தன் களப்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய மண்ணில் கால் பதிக்கின்றான். அன்றுதொட்டு அவனின் இறுதி நாள்வரை அவனை முழுமையாக அறிந்தவன், புரிந்தவன், தெரிந்தவன் என்ற ரீதியில் அவன் பற்றிய ஒரு சில வரிகளை எழுதுவது எனது கடமையில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இந்திய மண்ணில் தன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்ததும் போராளிகளை முழுமையாகக் கொண்ட கடற்புலிகளின் அணியை உருவாக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட 42 உறுப்பினர்களில் ஒருவனாகப் பாக்கியும் தெரிவு செய்யப்படுகின்றான். சென்னையின் கடலோரத்தில் முகாமிட்டு 6 மாதங்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொள்கின்றான். இதன் பின் இவ்வணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஓர் அணி வடமராட்சிக்கு தாக்குதல் நடவடிக்கைக்காக வருகின்றது. மற்றைய அணி இந்தியாவில் நின்று படகோட்டும் பணியை மேற்கொள்கின்றது. பாக்கியும் படகோட்டும் பணியில் இணைந்து திறமையான ஓர் படகோட்டியாக தன் பணிகளைத் தொடங்குகின்றான்.

இன்றுபோல் கடற்புலிகளிடம் வளங்கள் எதுவும் அன்று இருக்கவில்லை. அந்த நிலையிலும் வேகம் குறைந்த விசைப்படகுடன் ஆழி கடந்து அரும்பணி செய்தவன். காற்றையும், கடலையும் இயற்கையின் துணைகொண்டு அளக்கும் ஆற்றல் நிறைவாகக் கொண்டவன். வெள்ளிகளின் துணைகொண்டு விடிவிற்காய், தன் படகினைச் சொல்லும் இடங்களிலெல்லாம் கரை சேர்த்து நின்றவன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் எதிரியைக் கடலில் எதிர்கொண்ட போதும் சாதுரியமாகத் தன்படகை ஓட்டிக் கரை சேர்த்தவன். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தமது பயிற்சிகளை மேற்கொண்ட முதலாவது பெண் புலிகளின் அணியை மன்னாருக்குக் கொண்டு வரும் குழுவில் ஒருவனாக வருகின்றான். வங்காலைக்கு மேல் இவனின் படகு விபத்தொன்றைச் சந்திக்கின்றது. கோர அலைகள் படகை மூழ்கடிக்க நின்ற வேளையில் பாக்கி தன் தோழன் பழனியுடன் சேர்ந்து அப்பத்துப் பெண் போராளிகளையும் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றான். இது தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் சாதனையில் ஒன்றாகும்.

1987 ஆம் ஆண்டு தைத்திங்கள் 5ஆம் நாள் தமிழீழ மண்ணில் மீண்டும் தன் கால்களைப் பதித்துப் போராட்டத்தை முன்னெடுக்க இந்திய மண்ணை விட்டு வெளியேறிய அண்ணனைச் சுமந்து வந்த படகிற்குப் பாதுகாப்பிற்கு வந்த வண்டியின் ஓட்டியாக வந்த பாக்கியை நான் பெருமையோடு பார்க்கின்றேன்.

இந்தியப் படை மணலாற்றுக் காட்டையும், எல்லையில் அமைந்த பெருங்கடலையும் காவல் காத்து நிற்க இவர்களின் படகு வெடிப்பொருட்களோடு முல்லையின் கரைக்கு விரைந்து வருவதும், விழுப்புண்ணடைந்த வீரரை அக்கரைக்கு அடுக்கடுக்காய் சுமந்து நின்றதும், அன்றைய இவர்களின் அண்ணனையும் அவன் வாழ்ந்த காட்டையும் காத்து நின்றதும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. இந்திய நாட்டில் இலட்சியத்திற்காய் இவன் இருந்த சிறை வாழ்க்கையும், சிறையுடைத்து நாடு திரும்பிய இவனின் வீரமும் இன்றும் என் மனதில் பதிந்து தான் நிற்கின்றன. சிறையுடைத்து நாடு திரும்பிய பின்னும் தன் உறுதி குலையாது நிறைவாக எங்கள் அணியில் செயலாற்றி நின்றவன். கடற்சமர் பலவற்றிற்குப் படகோட்டியாக பல களமுனைகளைக் கண்டவன். எந்த ஒரு களத்திலும், தளத்திலும் தனக்குப் பணிக்கப்படும் பொறுப்புக்களை நிறைவுடன் செயற்படுத்தும் திறன் கொண்டவன். போராளிகளை மதித்தவன். அதனால் போராளிகளால் மதிக்கப்பட்டவன். "ஓயாத அலை - 03" இல் வடமுனைப்போரில் இவனிடம் என்னால் வழங்கப்பட்ட பணிகள் ஏராளம் ஏராளம். தனக்குத் துணையாய் நின்ற எல்லைப்படையினரின் உதவியுடன் களத்திற்கு வேண்டிய போராளிகளையும், படைக்கலன்களையும் நீரேரி வழியாகத் தளத்திற்கு நகர்த்திய இவனின் பணி அளப்பரியது. ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எம்மால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்திற்கு இவன் அச்சாணியாக விளங்கியவன். "நீங்கள் பாக்கி அண்ணனை எங்களோடை அனுப்புங்கோ நாங்கள் செய்து முடிக்கிறம்" என்று எல்லைப்படையினர் என்னிடம் அடிக்கடி கூறுவதில் இருந்து எந்த அளவிற்கு மக்களால் மதிக்கப்பட்டவன் என்பதை நான் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. தனது இறுதி நாளில் கூட நாகர்கோவிற்பகுதியில் நாம் மேற்கொள்ள இருந்த புதிய நடவடிக்கை ஒன்றிற்கான பெரும்பணியை மேற்கொள்வதற்காகத்தான் எல்லைப்படையினருடன் செம்பியன்பற்றுக்குச் சென்றவன். அதுவே அவனின் இறுதிப் பணியாகவும், பயணமாகவும் இருந்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை .

பாக்கி ......

"உன்னரும் சுற்றமும் சூழலும்
உன் உடல் தாங்கிய பேழையைச் சூழ்ந்து நிற்க
என்னரும் செல்வமே எனக்கதறிய இளம் துணைவியின்
அழுகைக் குரலின் மத்தியில் உன் பிஞ்சு மழலையின் ஈனக்குரல்
ஐயகோ...... தாங்க முடியவில்லையே"

இன்று இவரின் பிரிவைத் தாங்காது தவிக்கும் மனைவி, குழந்தை, உறவினர்கள் அனைவருடன் அவர்களின் துயரில் பங்குகொள்வதுடன் கடற்புலிகளின் சார்பிலும், எனது சார்பிலும் கடல்மறவன் லெப். கேணல் பாக்கிக்கு எனது வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

பிரிகேடியர் சூசை
கடற்புலிகளின் சிறப்புத் தளபதிImage
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.