• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
மேஜர் மறைச்செல்வன்

மேஜர் மறைச்செல்வன்


அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்துகொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்தபடி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்துகொண்டிருந்தது.

அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன்.

அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்குநோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிகநேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போகவேண்டியிருந்தது.

வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்தபோது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான்.

அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும்.

தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்ததன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்துவிட்டு தண்ணீர் எடுத்துவரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான்.

காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்குக் காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்கவேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதிபெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்றபோது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம்தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டிநிற்பது அதுவே.

வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும்போதுதான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கண்டிவீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்றபோது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒருபுறம் அவர்கள் தேடிவந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்றபோது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன.

வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன.

இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச்  துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவிவந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும்போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது.

அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன.

ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்துகொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூரநோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின.

கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது.

அந்தப் பெரிய சமரரங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்திவிட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது.

வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்துகொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான்.

ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்றபோது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.

துளசிச்செல்வன்



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.