• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
மேஜர் ஆதித்தன்

மேஜர் ஆதித்தன்


ஆண்டு 1983, யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இருபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.

'என்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ' பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள். பருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி மேஜர் ஆதித்தன்.

சின்னவயதில் இருந்தே வயதுக்குமீறிய பொறுப்புக்களையும், அவனது அளவைவிட பெரிய அளவில் துன்பங்களையும், துயரங்களையும் தன் தோள்களில் தாங்கி வளர்ந்தவன்தான் கரும்புலி மேஜர் ஆதித்தன்.

இவனைப் பற்றிச் சொல்லும்பொழுது வார்த்தைகள்கூட ஈரமாகும். சின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து விட்டான். உடலில் வலுவற்ற நிலையிலும் பிள்ளைகளுக்காக இயந்திரமாய் எஸ்ரேட்டில் கூலி வேலை செய்கிறாள் தாய். தமையன் ஒருவன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். சின்னண்ணனும் இவனைப் போலவே பாடசாலைக்குச் செல்லும் சிறுவன். இந்த நிலையில் நோயின் பிடி இறுக்கியதால் படுக்கையில் விழுந்துவிடுகிறாள் தாய். தங்களைக் காத்த தாயைக் காக்க இந்தச் சிறுவர்களால் என்ன செய்யமுடியும்? அண்ணனும் தம்பியும் சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். அண்ணன் எப்படியோ எங்கோ ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்துகொண்டான். இவனும் கொழும்பில் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். நாட்கள் கழிகின்றன.

தாயின் நினைவுடனும், நெஞ்சு நிறையக் கனத்த சுமையுடனும் பொழுதைக் கழிக்கும் சுதாகரனுக்கு (ஆதித்தனுக்கு) அன்று ஒரு புதிய திருப்புமுனையான நாள். வேலை முடிந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டு வானொலி ஒன்று தனது செய்திகளுக்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது நேர்காணல் ஒன்றை ஒலிபரப்புகிறது. தனது புலன்கள் யாவற்றையும் அந்தக் குரலை நோக்கித் திருப்பிய சுதாகரனுக்கு, அந்தத் தலைவனின் ஒவ வொரு சொல்லும் புதிய தென்பாய், நம்பிக்கையின் ஒளியாய் அவனுள் சுடர்விடத் தொடங்குகின்றது.

'தமிழருக்கான போராட்டம்', அவர்களுக்கான தலைவன் எதையுமே இதுவரை அறிந்திராத அவன், இப்போது அந்தத் தலைவன் மீதும் அவரது கொள்கை மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு தாயிடம் செல்கின்றான். தான் யாழ்ப்பாணம் செல்வதாகக் கூறி அனுமதி பெற்றுச்சென்று தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக்கொள்கின்றான்.

பயிற்சி முடித்தவன் சண்டைக் களங்களில் தன் திறமையைக் காட்டினான். ஜெயசிக்குறுவில் ஓர் நாள் எதிரியின் இறுக்கமான முற்றுகைக்குள் சிக்கியபோதும் தன் அணியினை திறமையாக வழிநடத்தி முற்றுகையை உடைத்து வெளிவந்தான் ஆதித்தன்.

எனினும் தேசத்துக்காக செய்யவேண்டிய உயரிய பங்களிப்புப் பற்றியே அவனது மனம் தினமும் அங்கலாய்த்தது. தான் கரும்புலியாய் போக எண்ணித் தனது விருப்பத்தை தலைவருக்கு கடிதமாய் அனுப்பினான்.

சில காலத்தின் பின் கடிதமொன்று வந்தது தாயிடமிருந்து. 'மகனே எங்களை ஒருக்கா வந்து பாத்திட்டுப்போ' அட்டை கடித்து இரத்தம் கசியும் காலுடன், மறுநாளும் வேலைக்குப் போகும் அந்தத் தாய் கூறுவாள். 'மகனே நான் கஸ்ரப்படுகிறது உங்களுக்காகத்தான், நீங்க நல்லா இருக்கோணும், எனக்கு அது போதும்' அதே தாய் அழைக்கிறாள் தன் கடைக்குட்டியை ஒருதடவை பார்ப்பதற்கு,

அன்று மாலையே, அவன் நேசித்த விசுவாசித்த தலைவனிடம் இருந்து பதில்க் கடிதம் வருகிறது, கரும்புலி அணியில் ஆதித்தனை இணைத்துக்கொள்வதாக. நீண்ட சிந்தனையின்பின் கரும்புலிப் பணிக்கு தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்து, அதற்கான பயிற்சிக்குச் செல்கிறான். பயிற்சி முடிந்தபின் இவனது இலக்கு மணலாற்றில். பயிற்சி எடுக்கப்பட்டது. ஆனால், திட்டம் கைவிடப்பட்டது. பின் யாழில் ஓர் இலக்கு, இலக்குத்தேடி இருளில் சென்றவனை இராணுவ வீரன் கட்டிப்பிடிக்க நொடிப்பொழுதில் அவனைத் தாக்கிவிட்டு மீண்டுவந்தான் ஆதித்தன். அதுவே ஒரு வீரக்கதை. பின்னர் அவனுக்கு இறுதி இலக்கொன்று கிடைக்கிறது. சென்றான் சென்றார்கள் திரும்பி வரவேயில்லை. செய்திமட்டும் வந்தது.

அவன் கையளித்து விடைபெறுகின்ற இறுதிநேரம் சொன்னான். 'மச்சான், அண்ணை எங்களைப் போகச்சொல்லி விடைகொடுத்தநேரம். அண்ணையின்ர முகம் வாடிப்போய் இருந்திச்சு, அதை நினைக்க மனசுக்கு கஸ்ரமாக இருக்கு. அண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். அதைப் பார்த்து அண்ணை சிரிக்கேக்கதான் என்ர மனமும் ஆறுதலடையும்.' என்று.



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.