ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.
இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார்.
2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார்.
இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார்.
2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார்.
08.05.1971 அன்று வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.
கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார்.
25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார்.
மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும்.
11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது கேணல் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார்.
எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார்.
11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்.
23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார்.
லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார்.
செ.யோ.யோகி
பொறுப்பாளர்,
சமராய்வு மையம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தகவல்கள்:
பிரிகேடியர் தீபன்
கட்டளைத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள்