• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
லெப்.கேணல் ஜெரி

லெப்.கேணல் ஜெரி


ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள். ஒரு நேர்த்தியான, அழகான படைய சீருடை தரித்த உருவத்தையே எல்லோருக்கும் சொல்வார்கள். அது அவனுக்கே தனித்துவமானது. அவனது வாழ்க்கை முறையே சற்று வித்தியாசமானது. எல்லா மனிதர்களும் அப்படி வாழமுடியாது. அதனால் அவனின் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருக்காது. ஆனாலும் அவனின் இயல்பை எல்லோரும் பெற்றுவிட முடியாது. அந்த மனிதனின் சுவடுகளைத்தான் இந்தக் குறிப்புக்கள் சொல்லி நிற்கின்றன.

ஜெரியை வீட்டில் அப்பன் என்றுதான் அழைப்பார்கள். ஆனாலும் சின்ன வயதிலேயே அவனின் செயற்பாடுகள் குழந்தைத்தனமானதாக இருக்கவில்லை. எப்போதும் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருப்பான். அவன் சும்மா இருப்பதில்லை. எதையாவது எடுத்துவைத்து ஆய்வு செய்துகொண்டிருப்பான். 1985ம் ஆண்டு அப்போது அவனுக்கு பதினாறு வயதுதான் ஆகியிருந்தது. நாட்டில் அப்போது சிங்கள படைகளால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் அவன் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்னால் ஏன் போராட முடியாது? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. ஒரு நாள் அவன் இயக்க முகாமொன்றிற்கு சென்று விட்டான். தானும் போராடப்போவதாகச் சொன்னான். ஆனால் அங்கே நின்ற போராளிகள் ஏற்பதாக இல்லை. இருபத்தி ஒரு நாட்கள் அவர்களுடன் நின்று தானும் போராடப் போவதாகக் கேட்டும், வயது போதாததால் சோகத்தோடு வீடு திரும்பினான்.

தான் எப்படியும் போராட வேண்டும் என்ற அவனின் எண்ணம் கொஞ்ச நாட்கள் கழித்து நிறைவேறியது. அவனுக்கு மனதில் மகிழ்ச்சி. தானும் போராடலாம் என்ற உத்வேகம் அவனுள் உருவாகியது. யாழ். சாவகச்சேரியில் நடைபெற்ற “சாவா – 01” பயிற்சி முகாமில் தொடக்கப் பயிற்சிகளை அவன் பெற்றுக்கொண்டான். பயிற்சிகள் முடிந்ததும். யாழ். மாவட்ட படையணியில் இருந்து செயற்பட்டுவந்தான்.

இந்த நாட்களில் தான் இந்தியப் படைகள் எங்களது தேசமெங்கும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்திய படைகளிற்கும் போராளிகளுக்கும் இடையேயான சண்டை மூண்டது. சண்டைகள் பரவலாக நடைபெற்றன. ஜெரியும் இந்த சண்டைகளை எதிர்கொண்டான். இந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத் தளம் யாழ்ப்பாணத்திலிருந்து மணலாற்றுக் காட்டுக்கு இடம் மாறுகின்றது.

உலகத்தின் நான்காவது வல்லரசு நாடு எங்களது போராட்டத்தை நசுக்க முற்பட்டபோது அதை முறியடிக்கத் தலைவன் வகுத்த திட்டத்தில் முதன்மையாய் இருந்தது மணலாற்றுக் காடு. அந்தக் காட்டில் தலைவருடன் முகாமிட்டிருந்த போராளிகளுக்குள் ஜெரியும் இருந்தான். ஆந்த வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் போராளிகள் எல்லோரும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டார்கள். காட்டில் எந்த வசதிகளுமே இருக்கவில்லை. எல்லாமே தேடவேண்டும். எல்லாவற்றையும் புதிதாகவே உருவாக்கவேண்டும்.

தலைவர் திட்டங்களை வகுத்து ஒவ்வொன்றாகச் செயற்படுத்தினார். அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கவேண்டும். எல்லா வளங்களையும் வெளியில் இருந்தே கொண்டு வரவேண்டும். ஆனால் அந்த மணலாற்றுக் காட்டைச் சுற்றி இந்திய படைகள் முற்றுகையிட்டுக் கொள்கிறது. வெளியில் இருந்து எதைக் கொண்டுவருவதானாலும் இந்திய படைகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கொண்டு வரவேண்டும். சில வேளைகளில் சண்டையிட்டுத்தான் பொருட்களைக் கொண்டு வரவேண்டும்.

 இந்தக் கடினமான பணி ஜெரிக்கும் இருந்தது. நீண்டதூரம் பொருட்களைக் காவி வரவேண்டும். இந்தப் பொருள்காவும் பணியை “கம்பாலா” என்றுதான் போராளிகள் அழைப்பார்கள். ஒரு தடியில் பொருட்களைத் தொங்கவிட்டு, இருவர் தோள்களில் வைத்தபடி கொண்டுவர வேண்டும். கம்பாலா அடித்தால்தான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். அதுவும் போதிய அளவு இருக்காது.

ஊடல் சோர்வாக இருந்தாலும் கம்பாலா அடித்தே ஆகவேண்டும். போராளிகள் சில வேளைகளில் உடற்களைப்பில் இருந்து விடுவார்கள். ஆனால், ஜெரி எப்போதுமே மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். “புறகென்ன நாங்கள் தானே தூக்க வேணும் வாங்கோ போவம்” என்றபடி அவன் புறப்பட்டுவிடுவான். சலிப்பு என்பது அவனிடம் இருந்ததில்லை. எந்த கடினங்களையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தன்மை அவனிடமிருந்தது.

காட்டில் எந்தவேளையும் இந்தியப் படைகளை எதிர்பார்த்தபடியே இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் நீண்ட நேரம் காவற் கடமை புரிய வேண்டும். எஞ்சிய நேரங்களில் சமையல் ஏனைய வேலைகள் என அவர்கள் எப்போதுமே இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. ஓய்வு என்பதும், உறக்கமென்பதும் மிகக்குறைவே. ஆனாலும் எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஜெரியும் இதைச் சாதாரணமாகவே ஏற்றுக்கொண்டான். குளிப்பதற்கு போதியளவு தண்ணி இருக்காது. கடும் உழைப்பால் உடல் அசதியாக இருக்கும் ஆனாலும் ஜெரி எப்போதும் அழகாகச் சீருடை தரித்து முகச்சவரம் செய்து இராணுவச் சப்பாத்து அணிந்து ஒரு அழகான தோற்றத்தில் காட்சி அளிப்பான். இந்த விடயத்தில் அவனை யாரும் விஞ்சிவிட முடியாது.

அங்கு விடியும் ஒவ்வொரு பொழுதுகளிலும் சண்டையை எதிர்பார்க்க முடியும். இப்படி நடந்த பல சண்டைகளில் ஜெரியும் பங்குபற்றினான். சுண்டை என்றால் ஒரு G3 ரக துப்பாக்கியுடன் ஜெரியை காணமுடியும். இந்திய படை தலைவரையும் எமது போராளிகளையும் அழித்துவிட மணலாற்றுக் காட்டில் பல படை நடவடிக்கைகளைப் பெயர் சூட்டி நடாத்தியது. இந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் சண்டையில் ஜெரியும் பங்குபற்றினான். பல நடவடிக்கைகள் தோல்வியடைந்து இறுதியாக “செக்மேற்” நடவடிக்கை இந்திய படை கட்டளை அதிகாரிகளில் ஒருவரான கேணல் பக்ஸி தலைமையில் நடைபெற்றது. இந்த நடவடிக்கை மூலம் தலைவரை எப்படியும் அழித்துவிடுவதுதான் அவர்களின் திட்டம். ஆனால், இறுதியில் விடுதலைப்புலிகளிடம் கடும் அடிவாங்கியது இந்தியபடை. கேணல் பக்ஸி கொல்லப்பட்டார். இந்திய படை ஒட்டமெடுத்தது. இந்த உச்சமான சண்டைகளிலெல்லாம் ஜெரி பங்குபற்றி இருந்தான்.

மணலாற்றுக் காட்டில் இருந்தபடி ஒரு வல்லரசு நாட்டினை சமர்க்களத்தில் வீழ்த்திய பெருமையுடன் மீண்டும் போராளிகள் பல இடங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஜெரி மணலாற்றில் இருந்து வந்ததும் இம்ரான் பாண்டியன் படையணியிலேயே நீண்ட காலம் பணிபுரிந்தான். இந்தப் படையணியில் இருக்கும்போது பல அனுபவங்கள் அவனுக்கு கிடைத்தன.

இம்ரான் பாண்டியன் படையணியின் வெளி நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பாக நின்று செயற்பட்டான். ஜெரியின் செயற்பாட்டில் நேர்த்தியிருக்கும். அவனிடம் பொறுப்பாக கொடுத்துவிட்டால் அவன் எப்படியும் செய்து முடிப்பான். வேலை என்று புறப்பட்டால் காலநேரம் பார்க்காமற் செயற்படுவான்.

வேலைகளை மக்களைக் கொண்டு செய்யும்போது அங்கு வேலை செய்பவர்களை வெறும் வேலையாட்களாக மட்டுமே பார்க்காது அவர்களின் வாழ்க்கைமுறை அவர்களின் குடும்பப் பின்னணி என்பவற்றையும் ஆராய்ந்து அவர்களுக்கு நல்வழிகாட்டுவான். பல வேலையாட்கள் தாங்கள் கடினப்பட்டு உழைக்கும் பணத்தை மது அருந்தி வீணே அழிப்பதை கண்ணுற்ற ஜெரி அவர்களுக்குப் புத்திமதி கூறி அவர்கள் திருந்தி நடக்கும்வரை அவர்களை வழிநடத்துவான். அவர்களின் உழைப்பால் கிடைக்கும் வருமானத்தை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்குவான். ஜெரியின் இந்தச் செயற்பாட்டால் பல குடும்பப் பெண்கள் ஜெரியை மெச்சினார்கள்.

அது ஆனையிறவில் புலிகள் சமர்புரிந்த காலம். 1997ம் ஆண்டு காலப்பகுதி விடுதலைப்புலிகளால் ஆனையிறவை நோக்கி பெரும் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அவனுக்கிருந்த பணி சமையற்கூடம். களத்தில் நிற்கும் போராளிகளுக்கு அவர்கள் நிற்கும் இடங்களுக்கு கொண்டு சென்று உணவு வழங்கவேண்டும். போர்ச் சூழலுக்குள்ளேயே சமையலாளர்களை வைத்து உணவு சமைக்க வேண்டும். இந்த சூழலுக்குள் படையினரின் எறிகணை வீச்சு, வான் தாக்குதலுக்குள்ளால் சமையற் பொருட்கள் மரக்கறிகள், மீன், இறைச்சி போன்றவற்றைக் கொண்டு வரவேண்டும். இவை தாமதமானாலும் உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும். சண்டைச் சூழலில் இது மிகவும் கடினமான பணி. இதற்காக ஜெரி கடுமையாக உழைத்தான். ஓவ்வொரு நாளும் அவன் வேலை முடிந்து ஓய்விற்குவர பின்னிரவு ஒரு மணியைக் கடந்துவிடும். ஆனாலும் காலையில் எழுந்து தனது வாகனத்தைத் தானே கழுவி துப்பரவு செய்துவிட்டு அன்றைய நாள் வேலைகளுக்குப் புறப்பட்டுவிடுவான். தன்னால் இயன்றவரைக்கும் உடற்சோர்வு பார்க்காது உழைத்தான். ஜெரியின் இந்த உழைப்பால் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு உணவு கிடைத்தது. இந்த ஆனையிறவில் தான் ஒரு சண்டையில் காயமடைந்த போராளி ஒருவனைத் தூக்குவதற்காக எதிரி சுட்டுக் கொண்டிருக்கும்போதே ஜெரி அவனை நோக்கி ஓடினான். ஜெரி அவனை அண்மித்தபோது எதிரியின் ரவை ஒன்று பட்டு அவனின் மோதிர விரல் பறந்தது. ஆனாலும், அந்த காயத்துடனேயே போராளியை அவன் தூக்கி வந்தான். நினைத்ததைச் சாதிக்கும் மனத்திடம் அவனிமிருந்தது.

ஜெரி எப்போதும் ஏனைய போராளிகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பான். தனக்கு வசதிகள் கிடைத்தால் கூட அதை அனுபவிப்பதைவிடவும் ஏனைய போராளிகளுக்கு கிடைக்கும் வசதிகளையே தானும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். அவன் விடுமுறையில் வீடு செல்வது கூட மிகக்குறைவு. அப்படி அருப்புத்துருப்பாக வீடு சென்றாலும் அங்கு வசதியாக பொழுதைக் கழிக்க அவன் விரும்புவதில்லை. படுப்பதற்கு பாயும் தலையணையும் கொடுத்தால் அதற்கும் கதை சொல்வான். களத்தில் நிற்போருக்கு உதெல்லாம் கிடைக்கவா போகிறது என்று விட்டு தானும் வெறும் நிலத்திலேயே படுத்துத் தூங்கிவிடுவான். நல்ல உணவு கொடுத்தாலும் இப்படித்தான் சொல்லுவான்.

1993ல் பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது ஜெரியும் ஒரு அணியினை வழிநடத்திச் சென்றான். இந்தச் சண்டையில் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் எதிரியின் எதிர்ப்பை முறியடிக்க முடியாதிருந்த பகுதியில் ஜெரி தனது அணியுடன் சென்று எதிரியுடன் சமரிட்டு அந்தப் பகுதியைப் பிடிப்பதற்கு காரணமாயிருந்தான்.

சந்திரிகா ஜனாதிபதியாக பதவியேற்றபின் 1995ல் யாழ். குடாநாட்டினைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படை பல தாக்குதல்களை நடாத்தியது. இடிமுழக்கம், சூரியகதிர் என நடந்த தொடர் தாக்குதல்களிலும் ஜெரி பங்கேற்றான். இந்த நடவடிக்கைகளில் ஜெரி அடுத்தடுத்து இரு தடவைகள் காயடைந்தான். காயங்களை அவன் பெரிதாக பொருட்படுத்திக் களத்திலிருந்து அகன்று விடுவதில்லை. ஜெரி ஒரு சிறந்த வேவுவீரன். அவனின் வேவுப்பணி சூரியகதிர் நடவடிக்கைக் காலப்பகுதியில் தொடங்கியது. ஒரு வேவுவீரனுக்குரிய சிறப்பியல்புகள் அவனிடமிருந்தன.

1995ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிது காலம் யாழ் தென்மராட்சிக் கோட்ட சிறப்புத் தளபதியாக இருந்த ஜெரி 1996ம் ஆண்டு வன்னியில் இருந்து திருகோணமலை சென்ற தாக்குதல் அணியில் ஒருவனாகச் சென்றான். கேணல் சொர்ணம் அவர்களின் தலைமையில் இந்த அணி சென்றதும் அங்கு படை முகாம்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றன. திருகோணமலைச் சூழல் ஜெரிக்கு முன்னைய மணலாற்றுச் சண்டைகளை நினைவுபடுத்தின. அங்கும் எல்லா வளங்களையும் வெளியிலிருந்தே கொண்டு வரவேண்டும். உணவுகள், சண்டைக்கான வெடிபொருட்கள் என எல்லாப் பொருட்களையும் பொருள் வந்து சேரும் இடத்திலிருந்து கம்பாலா மூலம் இருப்பிடம் கொண்டு செல்லவேண்டும். கொஞ்சநாள் சண்டை என்றால் கொஞ்சநாள் பொருட்கள் சேகரிக்க கம்பாலா அடிக்க வேண்டும். இவ்வாறு பல நெருக்கடிகளை எதிர் நோக்கினாலும் அங்கு பலதாக்குதல்கள் வெற்றிகரமாக, நடந்தேறின. மொறவேவ காவல்துறை நிலையத் தாக்குதல், பன்குளம் சண்டை, புல்மோட்டை மினிமுகாம் தாக்கியழிப்பு, என அங்கு நடந்த பல தாக்குதல்களில் ஜெரி தனது அணியுடன் பங்குபற்றினான். ஒவ்வொரு தாக்குதலிற்கு முன்பும் தாக்கவிருக்கும் முகாமினை வேவுபார்க்க வேண்டும். வேவுப்பணி ஜெரிக்கு பிடித்தமான பணி. அவன் வேவுப்பணியிலும் ஈடுபட்டான். மொறவேவ காவல்துறை நிலையத் தாக்குதலின்போது. சண்டையின் தொடக்கத்தில் பாதைகள் உடையவில்லை. களச்சூழல் மாறும் நிலையிருந்தது. ஜெரி சென்ற பகுதியும் நிலமை அவ்வாறே இருந்தது. ஆனால் ஜெரி அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு திட்டங்களைப்போட்டுத் தான் சென்ற பாதையை உடைத்து திறந்து பின் பகுதியால் உள்நுழைந்தான். அன்றைய தாக்குதல் வெற்றிக்கு ஜெரியின் திறமையான செயற்பாடு அதிக துணையாய் இருந்தது. எந்தப் பதட்டமான சூழ்நிலையிலும் தான் பதட்டமடையாமல் உறுதியாக நிதானமாக நின்றபடி கட்டளைகளை வழங்கி அணியை வழிநடத்தும் திறன் அவனிடமிருந்தது.

1997ம் ஆண்டின் நடுப்பகுதிவரை திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்ட அவன் மீண்டும் வன்னி திரும்பினான். வன்னியில் அவனுக்கு விரும்பமான பணி காத்திருந்தது. சிறப்பு வேவுப்பிரிவில் ஜெரி இணைக்கப்பட்டான். இந்தக் காலப்பகுதியில் தான் சிறிலங்கா படை ஜெயசிக்குறு என்ற பெயரில் பாரிய நடவடிக்கையைத் தொடங்கி வன்னியில் பல கிராமங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தொடர்ச்சியாகச் சண்டைகள் நடந்துகொண்டிருந்தன. ஜெரிக்கும் நிறையப்பணி காத்திருந்தன.

ஒரு வேவு வீரனின் வாழ்க்கை எப்போதுமே கடினமானது. எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி அவன் மூச்சுப்படும் இடத்தில் நின்றபடி வேவுபார்த்துத் திரும்புவது என்பது இலேசான வேலையல்ல. புறப்படும் நேரத்திலிருந்து மீண்டும் திரும்பும்வரையும் எந்த நொடிப்பொழுதிலும் சாவு நிகழலாம்.

பலமாக போடப்பட்டிருக்கும் எதிரியின் கம்பிவேலிகளை நெருங்கி காவலரணில் விழித்தபடியிருக்கும் சிப்பாய்கள் கண்டுவிடாதபடி தடைகளை வெட்டி எதிரிக்கு ஊடாகவே ஊடுருவி சில நாட்கள் எதிரிக்குத் தெரியாமல் அவனுக்கு அருகிலேயே தங்கியிருந்து வேவுத் தகவல்களைச் சேகரித்து மீள்வது என்பது சாதாரண வேலையல்ல. இந்த வாழ்க்கை மிகக்கடினமானது. ஆனாலும் இந்த கடினமான வாழ்க்கை ஜெரிக்குப் பிடித்திருந்தது.

ஜெரி போராட்ட இலட்சியத்தில் ஊறி வளர்ந்தவன். அவன் மனதில் போராட்ட இலட்சியம் பற்றியதும் தனது கடமையை செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும். தனக்கென தானே வரையறைகளைப்போட்டு அவற்றை நேர்த்தியாகக் கடைப்பிடிப்பவன். எதையும் யாருடனும் நேருக்கு நேரே கதைக்கும் இயல்புடையவன். தன்னைப்போல் மற்றவர்களும் இந்தப் போராட்டத்திற்காக உழைக்கவேண்டும் என்ற எண்ணமுடையவன். இதனால்தான் இவனின் செயற்பாடு சிலருக்கு பிடிப்பதில்லை. உண்மையில் ஒரு படை வீரன் இப்படித்தான் இருக்க வேண்டும்.

இந்த முன்மாதிரியான அவனின் இயல்பின் காரணமாக சிறிலங்கா படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நின்று செயற்படும் அணியை வழிநடத்துவதற்காக ஜெரி தெரிவு செய்யப்பட்டான். ஏனெனில் எத்தகைய நெருக்கடிகள் ஏற்படினும் ஜெரி பதட்டமடையாது நிதானமாக முடிவெடுத்துச் செயற்படுவான் என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது.

 1997ல் ஒன்பதாம் மாதத்தில் இறுதி வாரத்தில் ஜெரியின் தலைமையிலான வேவு அணியொன்று படையினர் ஜெயசிக்குறு மூலம் ஆக்கிரமித்த பகுதிக்குள் ஊடுருவுகிறது. படையினரின் இடத்தில் நின்றபடி எதிரியின் இருப்பிடங்களை, நகர்வுகளை வேவுபார்த்து எதிரிக்குத் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதே இவ் அணியின் நோக்கமாகும். இந்தப் பணி இலகுவான பணியல்ல. தாக்குதலுக்காக பயன்படுத்தும் வெடிபொருட்களையும், கொஞ்சம் உணவுப் பொருட்களையும் தோளில் சுமந்தபடியே எந்த நேரமும் நகர வேண்டும். ஒவ்வொரு நாளும் நீண்டதூரம் நடக்கவேண்டும் அந்த உடற்களைப்பிற்கேற்றதான உணவும் கிடைக்காது. தங்களிடம் இருக்கும் உலருணவைக் கொஞ்சம் உண்டுவிட்டு கொஞ்சத் தண்ணீரைப் பருகிவிட்டு பொழுதை வேவு பார்ப்பதில் களிக்க வேண்டும்.

படையினரின் நடுவில் நின்றபடி நிம்மதியாகத் தூங்க முடியாது. அதற்கான இடமும் கிடைக்காது. இந்த கடினங்களையெல்லாம் தாங்கியபடி ஜெரியின் அணி, செயற்பாட்டைத் தொடர்ந்தது எதிரிக்குள் இருந்தபடி தொல்லை கொடுக்கும் தாக்குதல்கள் தொடங்கின. வடகாட்டுப் புளியங்குளத்தில் ரோந்தில் வந்த படையினர் மீது தாக்குதல், கண்டிவீ தியில் புளியங்குளம் நோக்கிச் சென்ற  படையினரின் கொள்கலன் மீது கிளைமோர்த் தாக்குதல், சேமமடுவிலிருந்து இளமருதங்குளம் நோக்கி வந்த படையினரின் சொகுசு பேரூந்து மீது கிளைமோர்த் தாக்குதல், சின்னப் பூவரசங்குளத்திலிருந்து ஆனந்தர் புளியங்குளம் நோக்கிச் சென்ற படையினரின் வண்டி மீது தாக்குதல், நைனாமடுவிலிருந்து குறிசுட்டகுளம்நோக்கி வந்த படையினரின் உழவூர்தி மீது தாக்குதல் என பல தாக்குதல்கள் ஜெரியின் அணியால் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் பல சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல படைச் சொத்திழப்பையும் ஜெயசிக்குறுப்படை சந்தித்தது. இவற்றிற்கு மேலாக படைக் கட்டுப்பாட்டுக்குள் மேற்கொண்ட இத்தகைய தாக்குதல்களால் படையினர் எப்போதும் அச்சத்துடன் காணப்படும் நிலை ஏற்பட்டதுடன் அவர்களின் நகர்வுகளில் முடக்கம் ஏற்பட்டது. இது படைகளிற்கு பெரும் தலையிடியாக அமைந்தது.

இவ்வாறு திறமையாகச் செயற்பட்ட ஜெரிக்கு இன்னுமொரு பணி காத்திருந்தது. அது வவுனியா ஜோசப் முகாம் அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபடும் சிறிலங்கா உலங்கு வானூர்தியைத் தாக்கி அழிப்பதற்கான வேவு நடவடிக்கை. ஜெரியின் வேவு நடவடிக்கையில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. ஜெரி கொண்டு செல்லும் அணி எப்போதும் பாதுகாப்பாகத் திரும்பும். சண்டைகள் ஏற்பட்டாலும் குறைந்த இழப்புடன் அணியைக் காப்பாற்றி வேவுத்தரவுகளைப் பெற்றுவருவான் என்ற நம்பிக்கையிருந்தது. ஏனெனில் ஜெரி ஒவ்வொரு நகர்விற்கும் அவதானமுள்ளவன். கடுமையான விழிப்புடன் சூழலை அவதானித்து முன்னேறும் திறன் படைத்தவன். எந்த இக்கட்டிலும் பதட்டமடையாமல் அணியை சிதறவிடாமல் முடிவெடுத்துச் செயற்படக்கூடியவன். எந்த நகர்விலும் அலட்சியப் போக்கால் அணி எதிரியிடம் சிக்கிவிடாது பாதுகாப்பவன்.

இந்த முன் மாதிரிகைக்காகத்தான் அவனிடம் இந்தப்பணி கொடுக்கப்பட்டது. படைக் காப்பரண்களை ஊடுருவி அணி வேவுத் தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு எதிரியின் தளங்களை மிகவும் அண்மையாகச் சென்று பார்த்து தாக்குதலை மேற்கொள்வதற்கான முதற்கட்ட தகவல்களைத் திரட்டியபடி அணி தளம் திரும்பியது. அந்தத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன. மீண்டும் ஜெரியின் வேவு அணி உள்நுழைகின்றது. தாக்குதலுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அணி மீண்டும் தளம் திரும்ப முனைகிறது. எதிரியின் ஒவ்வொரு பகுதிகளாகக் கடந்து அணி எதிரியின் இறுதி காப்பரண்வரிசையை அண்மிக்கிறது.

 எதிரி நிறையத் தடைகளைப் போட்டுவைத்திருந்தான். இந்தத் தடைகளுக்குள்ளால் தனது போராளிகளை கவனமாக வெளியேற்றியபடி தானும் தடையைக் கடந்தான். அப்போதுதான் அது நிகழ்ந்தது. ஜெரி கீழே விழுந்தான். நிலமட்டத்தோடு எதிரியால் பாய்ச்சப்பட்டிருந்த மின் கம்பியில் அவன் சிக்கிவிட்டான். நொடிப்பொழுதில் அவன் உயிர் பிரிந்தது. என்ன நடந்தது என்று ஊகிப்பதற்குள் அவன் வீரச்சாவடைந்துவிட்டான். ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு போராளியையும் கவனமாக வழி நடத்துபவன். இன்று அவனுக்கு ஏன்தான் இப்படி நடந்து என்பதை அந்த இரவுப்பொழுதில் போராளிகளால் உணர முடியவில்லை. அவன் வித்துடலைச் சுமந்தபடி அவர்கள் தளம் திரும்பினார்கள்.

அன்றைய நாளில் உயிர்பிரிந்தாலும் அவன் சேகரித்த வேவுத் தகவல்கள் பத்திரமாக இருந்தன. அவன் சேகரித்த வேவுத் தகவல்களின் சுவடுகள் அவனுடன் கூடச்சென்ற வேவுப் போராளிகளும் விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் போராளிகளும் சென்று 26.06.1998ல் அவன் நினைவாகவே எம்.ஐ.24 ரக உலங்கு வானூர்தி ஒன்றை சுட்டு வீழ்த்தினர்.

 “ஜெரி நல்லொழுக்கமும் இயக்க கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் பண்புகொண்டவன் நீண்டகால சண்டை அனுபவமும், சிறந்த வேவு அனுபவமும் உடையவன். எந்த வேலையினையும் தானாகவே முடிவெடுத்துச் செய்யக்கூடியவன். சண்டைகள் திட்டத்திற்கமைய இல்லாவிட்டாலும் நிலைமைக்கேற்ப முடிவெடுத்துச் செயற்படக்கூடியவன். ஜெரி எங்களுடன் இருந்திருந்தால் இன்னும் நிறையச் செய்திருப்பான்” என்று அவனுக்கு இறுதியாகப் பொறுப்பாகவிருந்த கேணல் ஜெயம் அவர்கள் ஜெரியின் நினைவுகளைப் பகிரும்போது குறிப்பிட்டார்.

இந்த தேசவிடிவிற்கான இலட்சியப் போரில் மடியும் ஒவ்வொரு உயிர்களினதும் விலைகளின் பரிசாய் எங்கள் தாயகம் எங்கள் கைகளில் ஒரு பொழுதில் வந்துசேரும்.

ஆக்கம்: புரட்சிமாறன் 
மூலம்: விடுதலைப்புலிகள் (கார்த்திகை 2005)



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.