• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
லெப்.கேணல் மணி (ஞானசுதன்)

லெப்.கேணல் மணி (ஞானசுதன்)


நாகர்கோவில் பகுதி உணவுபிரிவு போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்த படைய மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா சாப்பிடுங்கோ என்று உணவை கொடுத்து கொண்டு அருகில் அமர்கிறார். “தம்பி என்னப்பு நான் சமைச்சு தாறன் என்றாலும் கேட்கிறியள் இல்ல இப்பிடி எனக்கு நீங்கள் சாப்பாட்ட தாறியள்.?” அந்த வயதானவளுக்கு நிலமை புரிந்திருக்கவே இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது அவளுக்கு தெரியவே இல்லை. தான் இப்போது வாழ்வது சண்டைக்களம் ஒன்றில் என்ற எண்ணம் அவளுக்கு வரவே இல்லை. வெடிச்சத்தங்களை அந்த தாய் பொருட்டாக எடுக்கவே இல்லை. பரவாயில்லம்மா உங்க பேரப்பிள்ளைகள் தானே தாறம் சாப்பிடுங்கோ…

அவள் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு வளர்ப்பு நாய் திடீர் என்று உணவு வாசத்தைஉணர்ந்து எழுந்து கொள்கிறது. அம்மா இவன எப்பிடி கொண்டு வந்தியள்? என்று மருத்துவர் கேட்க அருகில் புன்னகைத்துக் கொண்டு நின்ற மூத்த போராளியை பார்த்து புன்னகைக்கிறாள் அந்த 93வயதான மூத்த தாய். அந்த பார்வை ஒன்று நடந்ததை உணர்த்தியது. மணியண்ண என்று அன்பாக போராளிகளால் மட்டுமல்ல மூத்த தளபதிகளாலும் அண்ண என்று அன்பாக அழைக்கப்படும் அந்த மனிதன் எதையும் செய்யாதவர் போல சிறிய புன்னகைக்குள் தன்னை அடைத்துக்கொள்கிறார்.

அன்றைய சூழலில் அந்த இடம் மிகவும் பாதுகாப்பற்ற இடம் என்பது எவ்வளவு நியமோ அவ்வளவு நியமானது அந்த பகுதியில் பொதுமக்கள் ஆறு பேரின் பாதுகாப்பை தம்மால் முடிந்தவரை உறுதிப்படுத்தி காத்து வன்னிக்கு அனுப்பியதும் உண்மை. எம் படையணிகள் பலமான தாக்குதல்களை எதிர்கொண்ட அந்த சண்டையின் மத்தியிலும் அவர்களை காக்க வேண்டும் என்று துடித்தது நியம்.

சர்வதேசமே நெற்றியில் கை வைத்து யோசித்த வெற்றி சண்டை ஒன்றை புலிகள் செய்துகொண்டிருந்தனர். இன்றும் பல நாட்டு இராணுவ வல்லுனர்களை கேள்விக் குறியாக்கிய அந்த சண்டை வேறெதுவும் இல்லை. தமிழர் சேனையின் பெரும் தரையிறக்கத் தாக்குதலான ‘குடாரப்பு தரை இறக்கம்’ சர்வதேசத்திலே ஒரு மரபுவழி இராணுவமாக பரிணாமம் பெற்றிருந்த விடுதலை அமைப்பு இவ்வாறான தரை இறக்கத்தை செய்வதென்பது வரலாற்றுப் பதிவுகளில் முதல் தடவையாகும். விடுதலைப் புலிகளின் படையணிகள் ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு மண்டைதீவு படை முகாமுக்குள் ஒரு தரையிறக்கத் தாக்குதலை செய்து வொட்டர்ஜெட் வகை படகினை கைப்பற்றி சாதித்திருந்தாலும், குடாரப்புத் தரையிறக்கமே பாரிய தரையிறக்கமாக கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் தரித்து நின்ற 40000 சிங்களப்படைகளில் 20000 படைகள் சூழ்ந்து நின்ற பிரதேசத்துக்குள் குறுகிய அளவான 1500 பேர் கொண்ட தாக்குதல்அணிகள் தரையிறங்குவது என்பது எத்தகைய வீரம் என்பதை அனைவரும் அறிவர். அவ்வாறான ஒரு வீரம் மிக்க தாக்குதலான குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற்ற போது இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த சிறிதளவு மக்கள் கடும் சண்டைக்குள் சிக்குண்டனர்.

அவர்களை பாதுகாத்து சண்டை பிடிக்க வேண்டிய நிலை எம்மவர்களுக்கு எழுந்தது. அதனால் பெரும் இடர்களை புலியணிகள் எதிர்கொண்டன. யாருக்காக இந்த போராட்டமோ அவர்களை பாதுகாக்க பல பிரச்சனைகள் கண் முன்னே எழுந்தன. ஆனாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தமக்காக அமைக்கும் பதுங்ககழிகளை மக்கள் பயன்பாட்டுக்காக விட்டு வேறு பதுங்ககழிகளை உருவாக்கி சண்டையிட்டார்கள் புலியணிகள்.

அவ்வாறு எழுதுமட்டுவாள் பகுதியில் இருந்து பாதுகாக்கப்பட்டு செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் தேவாலயத்தின் அருகில் அமைக்கப் பட்டிருந்த மருத்துவ நிலையத்திலே அந்த வயோதிபத் தாயும் அவருடன் வேறு உறவுகளும் பாதுகாக்கப் பட்டனர். உறவுகள் மட்டுமல்ல அவர்களின் செல்லப் பிராணியான நாய்கூட காப்பாற்றப்பட்டது.

“தம்பி இவன் என் செல்லப்பிள்ள… அவன விட்டிட்டு வந்திருந்தால் நான் ரம்ப கஸ்டப்பட்டிருப்பனப்பு. எனக்கு இவன ரம்ப பிடிக்கும் அதனாலதான் நான் கேட்க முதலே பயங்கர சண்டைக்குள்ளும் என்னை இடுப்பளவு தண்ணியுக்கால எப்பிடி தூக்கி அந்த படகில இங்ககொண்டு வந்தாரோ அதைப் போலவே என்ட கண்ணனையும் தூக்கி படகில ஏற்றி கிபிர் காறனும் ஆமிக்காறனும் மாறி மாறி அடிக்க கொண்டு வந்து இங்க சேர்த்தவன். அதுக்க வந்த பாதை வெறும் சதுப்பு நிலமப்பு கண்டல் பத்தைகளும் வேர்களும் தான் நிறைஞ்சு கிடந்தது. அதுக்குள்ளால எங்கள பாதுகாத்து என்ட பிள்ள எங்கள கொண்டு வந்திச்சுது. அந்த பாட்டி கூறி முடிக்க முன் இராணுவ மருத்துவர் தணிகையும் மருத்துவப் போராளி சுடர்மதியும் ( பின்னொரு நாள்புலோப்பளையில் அமைந்திருந்த மருத்துவ முகாம் ஒன்றின் மீது எதிரியால் நடத்தப்பட்டஎறிகணைத் தாக்குதலில் கப்டன் சுடர்மதியாக வீரச்சாவு) அமைதியாக இருந்த ஞானசுதன்(மணி) என்ற அந்த மூத்த போராளியின் மனதில் இருந்த ஈரத்தை புரிந்து கொண்டனர்.

விடுதலைப் போராட்டத்தின் வளர்நிலை காலங்களில் வவுனியாக் காட்டுப் பகுதிகளிலும் மணலாறு காட்டுப்பகுதிகளிலும் எம் போராளிகளின் வழிகாட்டியாக இருந்த கணேசலிங்கம் அவர்கள் 1990 க்கு பின்னான காலப்பகுதில் விடுதலைப் புலியாக அடிப்படைப் பயிற்சிகளை முடித்து சார்ள்ஸ் அன்டனி சிறப்பு படையணிக்குள் உள்வாங்கப்படுகிறார். நீண்ட நாட்கள் “சார்ள்ஸ் அன்ரனி” சிறப்புப் படையணியின் நிர்வாக வேலைகளை செய்து வந்த மணி அவர்கள் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜின் நம்பிக்கைக்கும் நேசத்துக்கும் உரிய மூத்த போராளி. வோக்கியில் கதைக்க முடியாத இரகசியங்களை நேரடியாக சென்று கதைக்க முடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் தூதுவனாக மற்ற தளபதிகளிடம் தகவல் காவி செல்லும் நம்பிக்கையும் இரகசியம் காப்பவருமாக பால்ராஜ் அவர்களின் நெருங்கிய தோழனாகவே வாழ்ந்தார்.

பின்நாட்களில் வடபோர்முனை களமுனை பற்றிய செறிந்த அறிவு இருந்ததாலோ என்னவோ பிரிகேடியர் தீபன் அவர்களோட வடபோர்முனை கட்டளைப் பணியகத்தின் நிர்வாகங்களை பொறுப்பெடுத்து தன் நிர்வாக எல்லையை சரியாக நெறிப்படுத்தினார். அப்போதெல்லாம் களமுனை போராளிகள் சோர்ந்து போகாது நிமிர்ந்து நிற்க தன் பூரணமான ஆற்றலை வெளிப்படுத்தினார் லெப்.கேணல் மணி.

சண்டையும் சண்டைக்கான நிர்வாகத்திறனும் ஒருங்கே கொண்டமைந்த லெப்.கேணல் மணிதான் களத்தில் நின்ற அதே வேளை தனது மகனை தேச விடுதலைக்காக மனமுவந்து போராளியாக்குகிறார். தந்தை கடமையில் இருந்த அதே களமுனையில் மகனும் காவல் வேலியாக இருந்ததை ஈழ வரலாறு தன் மீது பதிந்திருந்தது. தமிழீழ தேசத்தில் தந்தையும் மகனும் ஒன்றாக களமுனைகளில் நின்ற வரலாறுகள் பல இருந்தாலும் அவற்றில் இதுவும் முதன்மை பெறுவதை தவிர்க்க முடியாததாக தேச வரலாறு எழுதப்படுகிறது.

இவ்வாறான ஒரு நம்பிக்கையான போராளியை,  பொறுப்பாளர்கள், மூத்த தளபதிகள் கூடஅண்ணா என்று அன்பாக உரிமை கொள்ளும் அந்த மனிதனை, சார்ள்ஸ் அன்டனி சிறப்புபடையணியின் தளபதியாக இருந்த இராஜசிங்கம் உட்பட்ட இளநிலைத் தளபதிகளின் நேசத்துக்குரிய அண்ணனாக சண்டைக் களங்களை சுற்றி வந்த பெரும் வீரனை குடாரப்புதரையிறக்கத்தின் போது மனித நேயம்மிக்கவனாக பல சம்பவங்கள் வெளிப்படுத்தி இருந்தன.

புலிகள் பயங்கரவாதிகள் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும் சிங்களமும் தமிழீழத்தில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்ல உயிரினங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக தம் உயிரையும் வெறுத்து களத்தில் நின்ற மணி உட்பட்ட அனைத்துப் போராளிகளையும் எந்த வரைக்குள் கொண்டு செல்லப் போகிறது. என்பது இங்கே முக்கியவினாவாக எழுகிறது.

இந்த களமுனை லெப்.கேணல் மணியின் மனிதத்துவத்தை காட்ட இன்னும் ஒரு சான்றை விட்டுச்சென்றது. களமுனையில் திடீர் என்று தோன்றிய டாங் ஒன்றை வீழ்த்த வில்லை என்றால் அந்தகளமுனையின் போக்கு மாறிவிடும் என்ற நிலை. களமுனையின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைக் கூட தமிழீழம் இழந்திருக்க வேண்டி வந்திருக்கும். அவ்வாறானஒரு நெருக்கடி மிக்க சூழ்நிலையில், எமது கவச எதிர்ப்பு ஆயுத பெண் போராளி ஒருவரின் துணிந்த தாக்குதலால் மண் அணையை தாண்டி நுழைய வந்த டாங் ஒன்று அடித்து சேதமாக்கப்படுகிறது. உண்மையில் இது நடக்கவில்லை என்றால் சண்டையின் போக்கு மாறி இருக்கும். ஆனையிறவு எம் கைகளில் வந்திருக்காது. குடாரப்பில் தரை இறங்கிய போராளிகள் அத்தனை பேரையும் இழக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் அதை முறியடித்து அந்த டாங்கை சிதைத்தெறிந்தாள் ஒரு இளைய பெண் போராளி.

அவள் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியால் அடித்து சேதமான டாங்கினுள் இறந்து கிடந்த ஒரு சிங்கள இராணுவ வீரன் ஒருவனின் புகைப்பட அல்பம் ஒன்றை எடுத்துப் பாக்கிறார் மணியண்ண அவரது கண்கள் பனிக்கின்றன… ‘கல்யாணம் செய்து கொஞ்சநாள் தான் இருக்கும் இங்க பாருங்கோ அந்த பிள்ளை சின்னப்பிள்ளை இவங்கள் எங்கட மண்ண ஆக்கிரமிக்க வந்து செத்திட்டாங்கள். ஆனால்அந்த பிள்ளையின் வாழ்க்கை…? ‘ அவர் எதிரியின் மனைவிக்காக அழுதது கவலை தந்தது. எங்கள் போராளிகள் வீரச்சாவடைந்த பொழுதெல்லாம் நாங்கள் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் எண்ணி கண் கலங்கி நின்றோம் ஆனால் லெப். கேணல் மணி எதிரிக்காகவும் அவனது குடும்பத்துக்காகவும் அன்று கண்ணீர் சிந்தினார்.

இவ்வாறான ஒரு மினிதத்துவம் மிக்க போராளியை வடபோர்முனைக் களமுனையில் வித்தாக்கிவிடுவோம் என நம்பவில்லை. ஆனால் எதிரியின் தாக்குதலில் 2007.12.06 ஆம் நாள் தான் நேசித்த மண்ணுக்காக விதையாகி போனார் லெப் கேணல் ஞானசுதன் (மணி) என்ற உத்தம வீரன்.

ஆக்கம்: கவிமகன். இ (போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள் நூலிலிருந்து)



Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.