இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை - அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர் நாகேஸ்வரன்.
நாகேஸ்வரன்தான் அவர்களிற்கு மூத்த மகன். இவனுக்குப் பின் முன்று தம்பிமாரும், நான்கு தங்கைகளுமாக அன்புடன் வளர்ந்து வந்தான். உடன்பிறப்புக்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவான். நாகேஸ்வரன் தன் தொடக்க கல்வியை யாழ். ஆழியவளை சி.சி.த.க.கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஆறு வரை கற்றான். படிப்பிலே மிகவும் கெட்டிக்காரன். படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி கலை நிகழ்விலும் சரி நல்ல கெட்டிக்காரன் தான். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் இவனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பள்ளியில் அனைவரோடும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்வான். ஆனால் படிப்பை இடையிலே நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
நாகேஸ்வரனின் குடும்பத்தொழில் கடற்றொழிலாக இருந்தது. இவன் சிறுவயதிலே நன்றாக நீந்துவான். புலிக்குட்டிக்குப் பாய்ச்சலும் மீன்குஞ்சுக்கு நீச்சலும் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்றொரு பழமொழி உண்டு. அதுபோல இவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க யாரேனும் தேவையில்லை தானே. சிறுவயதிலே தந்தையுடன் சேர்ந்து கடலிலே தொழிலுக்குச் செல்வான். சிறுவயதிலே குடும்பப்பாரம் இவனது கையிலே இருந்தது. அதனால், கடற்றொழிலில் அனுபவமுள்ள இளைஞனாக வளர்ந்து வந்தான். தந்தைக்கு உறுதுணையாக இருந்து பொருளாதார வளத்தைப் பெருக்க உழைத்தவன் நாகேஸ்வரன்.
நாகேஸ்வரன் கலை ஆர்வம் கொண்ட இளைஞனாக வளர்ந்துவந்தான். தற்காப்புக்கலைகளில் பயிற்சி பெற்று பரிசில்கள் பெற்றிருக்கிறான். மற்றும் விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் உள்ளவன். இவனது பகுதியிலுள்ள செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தில் ஒரு விளையாட்டு வீரன். காற்பந்தாட்டம் ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு சிறப்புப்பரிசுகளைமயும் பெற்றுக்கொண்டான். அத்துடன் கிராமிய கலைவடிவான கூத்து வடிவ நிகழ்வுகளிலும் கலைஞனாக நடித்திருக்கிறான். குறிப்பாக காத்தவராயன் கூத்துநிகழ்வில் காத்தவராயன் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியிலே பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைவிட கட்டுமரம் வலித்தல், நீச்சல், தலையணை சண்டை அனைத்திலும் பங்குபற்றுவான். நாகேஸ்வரன் மிகுந்த துணிவும், உறுதியும் கொண்ட இளைஞன். தனது முயற்சியால் தனித்து கடற்தொழில் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறான்.
இப்படியாக கடற்றொழிலில் இவனது இளமைக்காலம் போய்க் கொண்டிருக்கும் வேளையில் கடலிலே சிறிலங்கா கடற்படையின் வெறித்தாக்குதல்கள் இடம்பெறும். அப்போதெல்லாம் இவன் தனது கட்டுமரத்தை கடலிலே விட்டுவிட்டு நீந்திக்கரை சேருவான். இவ்வாறு பல தடவை கடற்படையிடம் பிடிபடாமல் தப்பிவந்திருக்கிறானெனின் இவன் வீரமுள்ளவன் தான் என்று சொல்லாம்.
கடற்கரையோரம் வீடு அமைந்துள்ளதால் கடற்கரையோரங்களிலே இவனது உடன்பிறப்புக்களுடன் நின்று விளையாடுவான். அவர்களுடன் தானும் சிறுபிள்ளையாக மாறி மகிழ்வுடன் விளையாடுவான்.
1991ல் வெற்றிலைக்கேணி சிறிலங்கா படைகளால் வல்வளைப்புச் செய்யப்பட்டவேளை மக்கள் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவனது குடும்பம் செம்பியன்பற்று பகுதியில் இருந்தது. தாயக மண்ணில் சிறிலங்கா படைகளின் வன்செயல்கள் அதிகரித்துக்கொண்டிருந்த காலத்தில் நாகேஸ்வரன் தன்னை உணர்ந்து தாய்நாட்டின் விடுதலைக்கு வலுச்சேர்க்க விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொள்கிறான்.
இவன் கடற்புலிப் போராளிகள் அணியிலே இணைந்து கொள்கிறான். தொடக்க, அடிப்படைப்பயிற்சிகளை வேகமான முறையில் எடுத்து முடித்துக்கொண்டான். பயிற்சிப் பாசறையிலே பயிற்சி ஆசிரியர்களோடும் போராளிகளோடும் அன்பாய் பழகினான். பயிற்சி முகாமில் இவனது திறமையால் பரிசுகளையும் பெற்று நல்லதொரு வீரனாக உருவெடுக்கிறான். அங்கே தனது பெயரை குமுதன் என்று மாற்றிக்கொண்டான். குமுதனின் மிடுக்கான தோற்றமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையம் அஞ்சா நெஞ்சமும் இன்னும் நினைவில் நிற்கின்றன.
குமுதன் கனரக பயிற்சி முதல் கட்டளை அதிகாரி பயிற்சி வரை பெற்றிருந்தான். ஏற்கனவே கடல் அனுபவமுள்ள குமுதன் கடற்சண்டையிலே சிறந்ததொரு கடற்புலி வீரனென்றால் அதுமிகையாகாது. பல கடற்சண்டைகளிலே போராடிய வீரன். கடற்பயிற்சிகள் யாவும் இனவனுக்கு விருப்பமானவை. தலைவரிடமும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறான். நீச்சல், வேக நீச்சல், கட்டுமரம் வலித்தல், படகு ஓட்டம், வேக ஓட்டம் இப்படி பல விளையாட்டுக்களில் இவன் தனது முத்திரையைப் பதித்துவைத்திருக்கிறான். சிறு வயது முதல் கடல் அன்னையோடு குமுதனுக்கு இருந்த தொடர்பு இக்காலங்களில் அதிகமாக இருந்தது. நீலவரியணிந்த வீரப்புலியாய் நீந்தித்திரிவான் குமுதன்.
16-09-2001 அன்று பருத்தித்துறை கடலிலே நடந்த பீரங்கிப்படகுத் தாக்குதலிலும் இவனது பணி முதன்மையாக இருந்தது. கடலிலே நடந்த சமரின்போது எதிரியின் குண்டுபட்டு கடலன்னையின் மடிமீது தலை சாய்ந்தான் லெப்.கேணல் குமுதனாக. தமிழீழ மண்ணிலே உறைந்துவிட்டான்.
கடலிலே மீனைப்போல நீந்தித்திரிந்த வரிப்புலி ஒன்று கடல்தாயின் விடிவிற்காய் தன் உயிரை தியாகம் செய்துவிட்டது. இந்த விடுதலை வீரனின் வீர உணர்வுகளை தமிழீழம் என்றமே மறக்காது. மாவீரர்கள் மரணத்தின் பின்பும் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சிரஞ்சீவிகள்.
'மானுட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம், மதம், மொழி கடந்து நேற்றுப்போல் இன்றும் நாளையும் என்றென்றும் எதிலும் உயிர்வாழ்வர்"
- போராளி நளாயினி -
லெப்.கேணல் குமுதன்
- த.இன்பன்