மேஜர் ஆந்திரா
Print

மேஜர் ஆந்திரா


அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள்.

சின்ன வயதில் மிதிவண்டி ஓடப்பழகிய தொடக்க நாட்களில் மண் ஒழுங்கைகள் எல்லாம் அவளின் அண்ணன் மிதிவண்டியைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள்.

"நேர அந்த வீட்டைப்பார்... நேர அந்த வீட்டைப்பார்" என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் தயங்கித் தயங்கி நேரே பார்த்து ஓட முயன்றாள். அவன் கையை விட்டுவிடுவான். அண்ணன் பிடித்திருக்கிறான் என்று நினைத்தபோது ஓடியவள் திரும்பிப் பார்த்து அண்ணன் இல்லை என்றதும் அந்த இடத்திலேயே விழுந்து விடுவாள். இப்படி தத்தித் தத்தி ஓடிய மிதிவண்டி வீட்டிற்கு கிட்டவுள்ள கடைக்குப் போகத்தொடங்கியது.

வேலிப் பூவரசில் பிடித்து தொடக்கும் மிதிவண்டி ஓட்டத் தொடங்கும் அவள் கடைக்குமுன் ஏற்றம் ஒன்றில் வேகம் குறைய குதிப்பாள். அந்த இடத்தில் ஆக்கள் நின்றுவிட்டால் சற்றுத் தூரம்சென்று வரும் மணலுக்குள் புதையவிட்டு வேகம் குறைத்து இறங்குவாள். அங்கிருந்து உருட்டியபடி கடைக்கு வந்துசேருவாள். கடையின் ஏற்றத்தடியில் இருந்து புறப்பட்டால் வேலிப் பூவரச மரத்தைப் பிடித்து நிறுத்துவாள். இப்படி அவள் தன் மிதிவண்டியை ஓட்டும் முயற்சியைக் கைவிடாமலும் உற்சாகம் குன்றாதும் தொடர்ந்தும் செய்துகொண்டேயிருந்தாள்.

இவளின் தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அத்தனை குறும்பு செய்வாள் என்று நினைக்கமாட்டார்கள். பாட்டியின் வளவுக்குள் களவாக இளநீர் பிடுங்கவென்று திட்டம் போட்டால் பாட்டியை சமாளிப்பது இவள்தான். பாட்டியிடம் பழைய கதை கேட்டு தலை கோதச்செய்து மடியில் படுக்க ஆசையென்று இவள் பாட்டியின் கவனத்தைத் திருப்ப அண்ணன் இளநீர் பிடுங்கி மறைத்துவிட்டு சத்தம் இல்லாது சைகை கொடுப்பான். இவளும் இரகசியமாய் போய் இளநீர் குடிப்பதில் பங்கெடுப்பாள். ஒருநாள் இளநீர் வெட்ட தொடங்கின்றபோது அண்ணனின் கையில் மாறி வெட்டிவிட்டாள்.

குருதி பெருக்கெடுக்கிறது. பிறகென்ன திரும்பவும் பாட்டியிடம்தான் ஓடிவரவேண்டியிருந்தது.

இவளின் குடும்பம் சிறிது. அப்பா கடற்தொழிலுக்குச் சென்றுவருவதால் பெரியளவில் பிரச்சினைகள் இல்லை. ஆனாலும் சில நாட்கள் பட்டினியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

வீட்டின் முழுச் சக்தியாக உழைத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்பாவின் சாவோடு அம்மாவின் பூவும் பொட்டுமல்ல எந்நேரமும் முகத்தில் தவழ்ந்த புன்னகையும்தான் உதிர்ந்துபோனது. வீட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசமானது. வானம் கண்விழிக்க முன்னமே அம்மா கண்விழித்து எழத்தொடங்கினாள். வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு படுத்திருக்கும் மூன்று பிள்ளைச் செல்வங்களையும் கண்வளரும் கற்பனையோடு பார்ப்பாள். பின் தனது வேலைகளைச் சுறுசுறுப்பாக ஆரம்பிப்பாள். அரைகுறைத் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளிற்கு அம்மா பாத்திரம் தேய்க்கும் சத்தமோ அல்லது வீடு கூட்டும் சத்தமோ மங்கலாகக் காதில்விழும். எழுந்துவந்து உதவிசெய்ய நினைத்தாலும் அம்மா விடமாட்டாள்.

"நீங்கள் படிச்சு நல்ல வேலை பார்க்கவேணும் போங்க... இதை நான் செய்யிறன்". படித்து பயனுள்ளவளாகி இந்த மண்ணுக்குச் சேவைசெய்யும் ஒரு தாதியாக வரவேண்டும் என்ற ஆசையோடு அவள் வளரத்தொடங்கினாள். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வயல் வேலைக்குப் போவாள். அங்கே சேற்றுக்குள்ளும் உச்சி வெயிலுக்குள்ளும் நின்று வேர்க்கக் களைக்க வேலைசெய்து வாட்டமாய் வீடு திரும்புவாள். வீடு வந்தாலும் மறுபடியும் வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் அவளே கவனிக்க வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் அம்மா மெலியத் தொடங்கினாள். உருகி உருகி எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு வந்துவிட்டன. கன்னக்குழியும் ஆழமாகிக்கொண்டு போனது. எல்லாரும் சொன்னார்கள் வறுமையால்த்தான் இப்படியென்று. ஆனால் யாரினது கண்ணிலும் படாது பொல்லாத நோயொன்று அவளை மெல்ல மெல்லமாகத் தின்றுகொண்டிருந்தது.

களைப்பும் சோர்வும் அவளை இயலாமைக்குள் தள்ளினாலும் தன் சத்திக்கு மீறியதாய் உழைப்பைத் தொடர்ந்தாள். ஒருநாள் அவளைவிட நோய் வலுக்காட்டியது. படுத்த பாயிலிருந்து எழும்ப முடியாமலே அம்மா கிடந்தாள்... பதறி அடித்துக்கொண்டு மருதங்கேணி சின்ன மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவேளை அங்கு இயலாது என்று கைவிரித்து விட்டார்கள்.

யாழ். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். அங்கேயும் சிறிதுகாலம் கழிந்தது. “இதயத்தில் ஓட்டை. இஞ்ச வைத்தியம் செய்வதென்றால் நிறையக் காசு தேவைப்படும்”  மருத்துவர் சொன்னபோது அது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஒத்து வராததாகவே இருந்தது. அம்மா இன்னும் சிறிதுகாலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு துயரம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது.

தான் சுகவாழ்வில் இருந்துகொண்டு மற்றவர்கள் துயரிலும் பங்கெடுப்பதிலும் தானே தன் சோகத்தைச் சுமக்கமுடியாமல் தள்ளாடுகின்றபோதும் மற்றவர்கள் துயரிற்குத் தோள்கொடுக்க நினைப்பதும் அதற்காக எத்தனை இடர்களையும் ஏற்கத் துணிவதும் எவ்வளவு மேலானது.

சிறிலங்கா படையினர் ”யாழ். தேவி” படை நடவடிக்கையை தொடங்கியபோது அவளின் ஊரும் தற்காலிகமாக இடமாற்றம் செய்துகொண்டது. அந்த வெடியோசைகள்தான் அவளின் இதயத்தை மெல்லமெல்ல வைரமான சிற்பமாகப் பொழியத் தொடங்கியது. வேகமாக தான் போராடப் போகவேண்டுமென்ற தேவையை உணர்த்தியது. அம்மா பாவம் அவளால் மகளின் மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

”இண்டைக்கு எனக்கு மீன்கறி காச்சித் தரவேணும்” என்று வழமைக்கு மாறாய் அடம்பிடித்தபோதும்  ”உங்கன்ர கையால தீத்திவிடுங்கோ” என்று செல்லம் பொழிந்தபோதும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து போகப்போகிறாள் என்று அம்மா நினைத்திருக்கவில்லை. ஆனால் சுதர்சினிக்கு (ஆந்திரா) தெரியும் தான் அம்மாவை விட்டுப் பிரிந்து போகப்போகிறேன் என்று.

06.10.1993ஆம் ஆண்டு. ஒரு மாலைவேளை அவள் எல்லோருடனும் இருந்து விடைபெற்று அருகில் இருந்த போராளிகளின் பாசறை ஒன்றில் சேர்ந்துகொள்கிறாள். அதற்குப் பின் நீண்டகாலம் அம்மாவை அவள் காணவேயில்லை.

அடிப்படை படையப் பயிற்சிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. புதிய போராளிகள் எல்லோரையும் ஒன்றாக்கி அவர்களது பொறுப்பாளர் கதைத்தபோது “இதுக்குள்ள யார் கரும்புலி?” என்று கேட்டார். உடனே இவள் எழுந்துவிட்டாள்! இவளின் சிறிய தோற்றமும் எழுந்து நின்ற விதமும் அனைவரது பார்வையையும் இவள் பக்கம் திருப்பியது. ஒருகணம் அமைதி நிலவிக்கொண்டிருந்தது. மறுகணம் அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.

அவளிற்கு அவர்கள்மேல் சினம்தான் வந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். அடிப்படை படையப் பயிற்சிகள் தொடங்கின. நீண்டதூரம் வேகமாக ஓடக்கூடியவள் பயிற்சிகளில் சிறந்து விளங்கினாள்.

அடிப்படைப் பயிற்சிகள் முடிய சிறுத்தை சிறப்புப் படையணிக்குச் சென்றாள். அங்கே சிறப்புப் பயிற்சியும் வெடிமருந்து பற்றிய கல்வியும் கற்றாள். அங்கிருந்து முல்லைத்தீவுச் சண்டைக்குச் சென்றவள் மீண்டும் சிறுத்தை அணியில் இணைந்துகொண்டாள். முல்லைத்தீவுச் சண்டையில் பட்ட சிறு விழுப்புண்ணிற்காக மருத்துவமனையில் சிறிதுகாலம் ஓய்வில் நின்றாள்.

இக்காலப் பகுதியில் தனக்கு ஏற்பட்ட விழுப்புண்ணின் நோவை விட அவளை வாட்டியது வேறொர் நிகழ்வு.

கொக்குத்தொடுவாய் சண்டைக்கு(மணலாறு 5 முகாம்கள் மீதான சமர்) அணிகள் புறப்பட்டபோது முகாமின் வாசல் காவல்கடமையில் நின்றது இவள்தான். அணி சென்றபோது இவள்தான் முகாமின் தடை திறந்து வழியனுப்பிவைத்தது. அவர்கள் கையசைத்து “அண்ண எதிர்பார்க்கிறதைச் செய்துபோட்டு வருவம்“ என்று கூறிவிட்டுப் போனவர்கள் போனவர்கள்தான். வித்துடலாகப் பேழையில் வந்தார்கள். அதுவும்... நினைவுகள் அவளை வல்வளைக்கின்றபோதும் அவற்றைக் கலைத்துவிட நினைத்து வேறு எதையாவது சிந்திப்பாள். ஆனால் நினைவுகளோ அவளை நிழல்களைப்போல பின்தொடரும். இந்த நினைவுகளின் அவளிற்குப் பெரும் சுமையாக இருந்தது. அதுவே அவளின் இலட்சியத்திற்கு வலுச்சேர்த்தது.

அவள் இயக்கத்தில் இணைந்து பல ஆண்டுகளின் பின் இயக்கவேலை காரணமாக ஒருநாள் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கச்சான்காறி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அது தனது அம்மாதான் என்று அடையாளம் கண்டபோதும்... இவ்வளவு நேரமும் கச்சான் விற்பனை செய்து பெற்ற சிறுதொகை காசையும் கைச்செலவுக்கென்று அம்மா கைக்குள் திணித்தபோதும்... அதை வேண்டினால் வீட்டில் இரண்டு தங்கைகளும் பட்டினிகிடக்க வேண்டிவரும் என்று அழுதபோதும்... நெஞ்சுக்குள் எவ்வளவோ ஏக்கங்கள் எழத்தான் செய்தன. ஆனால் அது குறுகிய வட்டத்திற்குள் நின்று சிந்திப்பதைப்போல அவளின் குற்ற உணர்வு உணர்த்தியது. இந்த உணர்வு பிறர் நேசத்தின் உச்சத்திலேயே உருவாகமுடியும்.

மற்றவர்களிற்காக வாழ்வதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக சாவைச் சுமக்கத் துணிந்த கரும்புலியல்லவா அவள்? கரும்புலி அணியிலிருந்த ஒவ்வொரு நாளிலுமே தான் இலக்கை தகர்க்கப்போகும் நாளை எண்ணிக் கொண்டேயிருந்தாள். இவளிற்கு இருந்த வயிற்றுப்புண் காரணமாக கடுமையான பயிற்சிகள் செய்வது கடினமானதாக இருந்தாலும் அவள் ஒருநாள் கூட ஓய்வாக இருக்க மாட்டாள். காய்ச்சல் என்றோ உடற்சோர்வென்றோ பயிற்சிகளில் இருந்து நின்றது கிடையாது.

"என்ர கையால சாஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்க வைக்கவேணும்" (சாஜ் - முக்கிய இலக்குகளை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொதி) என்று அடிக்கடி தோழர்களிடம் சொல்லிக்கொள்வாள்.

பயிற்சி முடிந்து ஓய்வான பொழுதுகளில் பூக்களைப் பறித்துவந்து முகாமில் அலங்கார வேலைகள் செய்வாள். ஒரு நாளைக்கு ஒரு மாதிரியான அலங்காரம் அப்படிச் செய்வதில் அவளுக்குத் தனிப் பிடிப்பு.

சிலவேளை கறி சமைப்பாள். ஏனைய போராளிகளையும் அழைத்து தான் சமைத்த உணவைத் தானே பரிமாறி அவற்றின் சுவையெப்படி என்று அறிவதில் ஆர்வம் காட்டுவாள். இவளிற்கு மீன் குழம்பு என்றால் மிகவும் விருப்பம். அந்தக் கறியை மிகவும் சுவைபடச் சமைப்பாள்.

ஆந்திரா சண்டைக்குப் போய்விட்டாள். எவ்வளவு துடியாட்டமும் தான் நினைத்ததைச் செய்துவிடவேண்டும் என்பதில் ஆர்வமும் கொண்டவள். எப்பொழுதும் அவள் நினைத்தவற்றையே செய்துமுடிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தவள். தன் இறுதி மூச்சிலும் தேசத்திற்குத் தேவையான வெற்றியை நிலைநாட்டிவிட்டு வீரகாவியமாகிவிட்டாள்.

31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறி தளத்தினுள் நுழைந்து நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துவிட்டு வெற்றியோடு திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையிலேயே இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேருக்கு நேரான மோதலில் வீரச்சாவடைகின்றாள். தேசத்தின் அழியாத வரலாறாய் காலம் இவளது பெயரையும் குறித்து வைத்திருக்கும்.