சத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா... அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே தாங்கமாட்டாமல் கசிகின்ற கண்களும் மீண்டும் மீண்டும் அவளை நினைவூட்டுவனவாகவே இருந்தன.

சின்னப்பிள்ளை அல்ல கட்டையென்றுதான் அவளைச் சொல்வார்கள். அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் அவள் சின்னப்பிள்ளையில்லை. 06.02.1978ல் பிறந்தவள். 11ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது போராட்டத்தில் இணைந்துகொண்டவள்.

நடக்கின்றபோது அவளின் துடியாட்டமான நடை ஒரு உற்சாகமான கறுப்புத் தாரா நடப்பதுபோல் இருக்கும். அவள் “லோ” கட்டினால் அதுவும் அவளும் ஒரேயளவு போல் எண்ணத் தோன்றும். ஆனையிறவுக்குள் நடத்தப்பட்ட பல கரும்புலித் தாக்குதல்களில் இவளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. தண்ணீருக்குள்ளால் நகர்ந்து செல்லவேண்டிய அநேகமான தாக்குதல்களுக்கு இவள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவளின் குறைந்த உயரம்தான் அதற்கு ஒரேயொரு காரணம்.

நித்தமும் இப்படியே வாய்ப்புக்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தால் அவளுக்கு அழுகை வந்துவிடும். தனக்குச் வாய்ப்புத் தரும்படி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருப்பாள். இவளோடு அன்பாய் சண்டை செய்வதற்காக மற்றத் தோழிகள் இவளைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.

“நாங்க போறம்...” என்ற போதெல்லாம் அவள் தனது உறவுகளை மறைத்துச் சிரிப்பாள். “நானும் வருவன்தானே. ஆனையிறவுக்குத்தான் தண்ணி கடக்கவேணும். பலாலி றோட்டால போவன்” என்று தன் உள்ளத்தில் என்றுமே மாறாத உறுதியைச் சொல்வாள். ஆனாலும் அவளுக்குள் உள்ளூர ஒரு துயர் இருக்கவே செய்தது. தானும் விரைவாகப் போய் தனது இலக்குகளை அழிக்கவேண்டும். நளா அக்காவும் இன்னும் எத்தனையோ கரும்புலி வீரர்களின் கனவோடு சென்று மக்களின் அவலவாழ்வு போக்கவேண்டும் என்ற துடிப்பு, வெளித்தெரியாமல் அவளிற்குள்ளேயே மறைந்திருந்தது. அவளைக் கரும்புலியாய் மாற்றியது அவள் பழகிய ஒவ்வொரு கரும்புலி வீரர்களின் முகங்களும் அவர்களின் இலட்சியம் சுமந்த அங்கங்களும்தான். அந்த வீரர்களின் முகங்கள்தான் நெஞ்சில் நிறைந்திருந்தது. கரும்புலிகளோடு சேர்ந்து வாழ்வதும் அவர்கள் பிரியும்போது இதயம் விம்முவதும் யாராலும் தாங்கமுடியாத வேதனை. அவளிற்கு இது எத்தனையோ தடவை வந்துபோன நிகழ்வு.

இயக்கத்தில் இணைந்து அடிப்படை படையப் பயிற்சி முடிய முன்னரே சூரியகதிர் படை நடவடிக்கையில் காவு குழுவாகச் செயற்பட்டவள்.

காயப்பட்ட போராளிகளையும், வீரச்சாவடைந்த வித்துடல்களையும் சுமந்து அவள் தோள்களும், கைகளும் காய்த்திருந்தன. முதலுதவி பண்டுவம் வழங்கிக் கொண்டிருந்தபோது பல போராளிகள் அவள் மடியிலேயே உயிரடங்கியிருக்கிறார்கள். அவையெல்லாம் வேதனைதான். அவள் தனக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தாள். அந்த நாட்கள்தான் போராட்ட வாழ்வில் அவள் முதலில் சந்தித்த கடுமையான நாட்கள். ஈர உடைகள், உடைமாற்ற நேரமற்றுக் கடமைகள், ஓய்வில்லாமல் தொடர்ச்சியாகக் களப்பணிகளில் ஈடுபட்டவள் அந்தக் களத்திலிருந்து வந்து சிறிதும் ஓய்வில்லாமலே முல்லைத்தீவுச் சமரிற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு சண்டையிலும் பங்குபற்றினாள். அந்தச் சண்டையில் தலையில் சிறு காயம், அது மாறமுன்னரே “சத்ஜெய” சண்டைக்குப் போகப்போறன் என்று அடம்பிடித்து சத்ஜெய சண்டையில் நின்ற போதுதான் இன்னொரு முக்கியமான பணி இருக்கிறது என்று பின்களமுனை அழைத்து இந்தப் புதிய பணி கொடுக்கப்பட்டது.

அவள் கரும்புலிகள் அணிக்குள் நிர்வாகம் தொடர்பான வேலைகளுக்காகச் சென்றாள். அங்கே செல்வதற்கு முன்பிருந்த கரும்புலிகளின் ஈகங்களை, அவர்களின் உணர்வுகளை புரிந்துவிட வேண்டும் என்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது.

அவளின் விருப்பப்படியே அமைந்துவிட்ட இந்தப் பணியால் மகிழ்ந்தாள். நாட்கள் செல்லச்செல்ல அவர்களுடனான உறவும் வலுப்பெற அவளின் செயற்பாடுகளுக்குள்ளேயே மாறுதல்கள் வந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரர்களும் எவ்வளவு மென்மையானவர்கள், மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், தமக்குள்ளேயே எத்தனையோ சோகங்கள், வேதனைகள் இருந்தாலும் சிரித்துச் சிரித்து மற்றவர்களிற்காக வாழ்கிறார்கள். இப்படி அவர்களின் இதயங்களை அறிந்தபோது அவர்கள் மீதான அன்பு வலுவானது. நிலைக்காத உறவென்று தெரிந்த பின்பும் நினைவுகளில் அவர்களின் நினைவுகளே நெருக்கமானது. அங்கே நளாதான் (மேஜர் நளா) இவளில் அதிகபாசம். அவளும் அப்படித்தான். பயிற்சி முடிந்து வரும் ஓய்வு நேரங்களிலும் அவள் இவளோடு கதைப்பதும் அறிவுரை சொல்லுவதுமாகவே பொழுதுகள் கழிந்தது. அவளின் நெஞ்சிற்குள் இருந்த உணர்வுகள் முழுவதும் இவளுக்கும் தெரிந்திருந்தது.

ஆனையிறவுத் தளம்மீது நடத்தத் திட்டமிட்டிருந்த கரும்புலித் தாக்குதலிற்கு ஆசா தலைமையில் ஒரு அணி தயாரானபோது இவள் தன்னைப் பிரிந்து நளாக்காவும் மற்றத் தோழியரும் போகப்போகிறார்களே என்று அழுதபடி சிந்தித்த நாட்கள் கடுமையானதாகவேயிருந்தது. தாக்குதலிற்குச் செல்லத் தயாரானவர்கள் கலகலப்பாகவே இருந்தார்கள். இவளிற்கு ஆறுதல் கூறித் தேற்றினார்கள்.

“நாங்கள் சாதிக்கப்போறம் சாகப் போகேல்லை” என்று எல்லோரும் ஒரே மூச்சில் கூறிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களின் நிரந்தரமான இழப்பால் அவள் நிலை தளர்ந்துபோனாள். அவர்களிற்காக அழுவது பிழையெனக் கண்டாள். கண்ணீர் உறுதியைக் கரைத்துவிடும் என்று கண்களிற்குள்ளேயே கண்ணீரைத் தேக்கினாள்.

இப்போது அவர்களின் வழியில் அவளும் ஒரு கரும்புலியாகிவிட்டாள். இவள் கரும்புலி என்ற கனவினை நெஞ்சினுள் நிறைத்துக்கொண்டு கண்களால் அதை மறைத்துக்கொண்டு விடுமுறையில் அம்மம்மா வீடு சென்றாள்.

சின்ன வயதிலிருந்து அவள் அம்மம்மாவோடுதான் வளர்ந்தவள். அம்மம்மாவைத்தான் இவள் அம்மா என்று சொல்வாள். அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாணத்தில் சிலவேளைகளில் இங்கே வந்து இவளைப் பார்த்துவிட்டு போவார்கள். விடுமுறையில் வந்தபோது எல்லாம் மாற்றமாகவே இருந்தது. அம்மம்மா இறந்துவிட்டார். அவரின் இடத்தில் இப்போது சித்தியே இருந்தாள். விடுமுறைக்காலம் கலகலப்பாகக் கழிந்தது. “இஞ்ச இருட்டுக்கு பயப்பிடுகிறனி விளக்கு நூந்தாலே கத்திறனி அங்க என்னண்டு துணிவாய் நிற்கிறாய்” என்றபோது அவள் சிரிப்பால் மட்டும் சமாளித்துக் கொண்டாள். அது வெறும் சிரிப்பல்ல அந்தச் சிரிப்புக்குள் ஏராளமான அர்த்தங்கள் இருந்தன.

“இருட்டுக்குப் பயந்தவள் வெளியில போறதென்றால் நான் அல்லது அம்மா வேணும். இவள் வீட்டுக்குள் நிற்கேக்குள்ள விளக்கு நூந்தால் வெளியில வரமாட்டாள். வெளியில நின்று விளக்கில்லாட்டி உள்ளுக்குள் போகமாட்டாள். அவ்வளவு பயம். சும்மா வெருட்டினாலே கத்துவாள்”

சத்தியாவோடு சென்ற தோழிக்கு சின்னம்மா தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தாள். சத்தியாவோ தன் தோழியையும் சின்னம்மாவையும் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு மாறாமலே விடைபெற்றுக் கொண்டாள். அந்தச் சிரிப்புக்குள் எவ்வளவோ அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

அவள் எவ்வளவு துணிச்சலான போராளி. தேசப்பற்றிலும், தோழர்களது இலட்சியத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற இலட்சியத்தில் ஊறி வளர்ந்தவள். தனியே சென்று ஒரு இராணுவ இலக்கைத் தகர்ப்பதற்குக்கூட திடம் கொண்டிருந்தவள்.

31.03.2000 அன்று தாமரைக்குளம் பகுதியில் நான்கு ஆட்லறிகளை அழிப்பதற்கு வழியமைத்துவிட்டு வீரகாவியமாகினாள்.

- துளசிச்செல்வன்
 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com